“மேலும் கடைசி நாட்களில் கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக”
– 2 தீமோத்தேயு 3:1

“நடக்கும் என்பார் நடக்காது, நடக்காதென்பார் நடந்து விடும்…”
– தமிழ்த்திரைப்படப் பாடல்

“இலங்கையில் இராணுவ ஆட்சி வருவதற்கான வாய்ப்புண்டு” என்றால் உங்களில் பலருக்கும் இப்பொழுது நம்பக் கடினமாகவே இருக்கும். ஆனால், அதற்கான சாத்தியங்கள் ஏராளமாக உண்டு. அது எப்போது நிகழும் என்று இங்கே நாம் கூறவில்லை. ஆனால் அதற்கான கதவுகளை திறந்து சாத்தியங்களை அதிகரித்துக் கொண்டிருக்கின்றன இலங்கை அரசும் அரசியலும்.

இலங்கை அரசும் இலங்கையின் அரசியலும் சீரழிந்து விட்டன Maithri - Ranil - Mahinda_0

என்பதை நாம் சொல்லித்தான் தெரியவேண்டும் என்றில்லை. ஜனநாயக வழிமுறையில் தேர்தல் மூலமாக தெரிவு செய்யப்பட்டவர்கள் ஊழல், அதிகாரப் பிரயோகம், அதிகார துஷ்பிரயோகம், ஜனநாயக விரோதம் என்று மக்களுக்கு விரோதமான அத்தனையையும் செய்து கொண்டிருக்கின்றனர். மட்டுமல்ல பொருளாதார நெருக்கடி, இன முரண்பாடு, இராணுவ நெருக்குவாரங்கள் என்று நாட்டுக்குப் பொருத்தமில்லாத காரியங்களையும் சாதனையாக நிகழ்த்துகின்றனர். இதனால் சனங்கள் தொடர் நெருக்கடிகளுக்குள்ளாக வேண்டியுள்ளது. சனங்களுக்கு வரவரப் பிரச்சினைகள் கூடுகின்றனவே தவிரக் குறைகிற மாதிரித் தெரியவில்லை. இதில், தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள், மலையக மக்கள் என்ற எந்தச் சுருதி பேதங்களுமில்லை. கடன் சுமையில் நாட்டையும் மக்களையும் தவிக்க விட்டிருப்பதே இந்த அரசியலாளர்கள் செய்த அரும்பணி. போதாக்குறைக்கு இந்தியா, அமெரிக்கா, சீனா என்று வெளிச்சக்திகளின் தலையீடுகள் வேறு உச்சமடைந்துள்ளன. கறிக்கு உப்புப் போடுவதென்றாலும் இவைகளைக் கேட்டுத்தான் போட வேண்டும் என்ற அளவுக்கு நிலைமை உருவாகியுள்ளது. இதுக்குக் காரணம், வயிற்று வலி என்றாலும் வயிற்றால் போகவில்லை என்றாலும் ஓடோடிப் போய் அமெரிக்காவிடம் முறையிடும் தலைவர்களே. இதில் யாரும் விலக்கல்ல. ஒருவர் அமெரிக்காவிடம் போனால் மற்றவர்கள் இந்தியாவின் கால்களில் போய் விழுந்து முறையிடுகிறார்கள். இன்னொருவர் ஒன்றுக்குப் போவதற்கே சீனாவைத்தான் கேட்டுப்போக வேணும் என்ற நிலையில்.

இப்பிடி ஆளாளுக்கு தங்களையும் அடைவு வைத்துச் சனங்களையும் சில்லறைக்கு விற்க முற்பட்டால் நாடும் அரசியலும் சீரழியாமல் உருப்படுவது எப்படி? இந்தச் சீரழிவின் இன்றைய வடிவமே அலரிமாளிகையை விட்டு வெளியே வரமாட்டேன் என்று ரணில் அடம் பிடிப்பதும் ரணிலை அலரி மாளிகையில் இருக்க விடமாட்டோம் என்று மைத்திரி – மகிந்த கூட்டணியும் அடம் பிடித்துக் கொண்டிருப்பதும். இந்தப் பிரச்சினைக்கு விலக்குப் பிடிப்பதற்கென்று இந்தியா, அமெரிக்கா, சீனா, ஐ.நா என்று சர்வதேசத் தரப்புகள் கச்சையை இறுக்கிக் கட்டிக் கொண்டிருக்கின்றன. நாட்டின் இறைமை, பாதுகாப்பு, கௌரவம் எல்லாம் கிழிந்து தொங்குகிறது.

சுயமாகச் சிந்திக்கக் கூடிய, சுய மரியாதை உள்ள எவரும் இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. ஆனாலும் இதற்கு மறுப்பாக சனங்களால் உடனடியாக எதையுமே செய்யவும் ஏலாது. மாற்று அரசியல் சிந்தனையாளர்களையும் புதிய சக்திகளையும்  இனங்கண்டு மக்களிடம் அவர்களுக்கான ஆதரவைப் பலப்படுத்துவதற்கும் யாரும் தயாரில்லை. அப்படி மாற்றுக்கள் வந்தாலும் அவற்றையெல்லாம் எப்படியோ ஓரங்கட்டும் முயற்சிகளே நடந்து விடுகின்றன. இதற்குப் படித்தவர்களும் சிந்திக்கக் கூடியவர்களும் உடந்தையே. இந்த நிலையில் சனங்களின் தேவையை நிறைவேற்றுவது யார்? அதிருப்தியைப் போக்குவது எப்படி? பிரச்சினைகளைத் தீர்ப்பது யார்? நாட்டைக்காப்பாற்றுவது எப்படி? சிறந்த ஆட்சியை வழங்கக்கூடியவர் எவர்? என்ற கேள்விகள் எல்லாப் பக்கத்திலிருந்தும் எழுந்துள்ளன.

தங்களுக்குரிய தலைமை எது என்று தெரியாத நிலை இன்று தமிழ்ச்சமூகத்துக்கு ஏற்பட்டுள்ளதை எல்லோரும் அறிவர். மாற்றுத் தலைமை  வேண்டும் என்ற குரல்கள் எழுந்திருப்பது நம்பிக்கைக்குரிய – பொருத்தமான தலைமைகள் இல்லை என்பதனால்தானே. இதே நிலைதான் முஸ்லிம்களிடத்திலும் மலையகத்திலும். ஏன் சிங்களத் தரப்பிலும்தான். ஆக மொத்தத்தில் நாடே புதிய தலைமைகளையும் புதிய நிலைமைகளையும் தேடிக் கொண்டிருக்கிறது, எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

இந்த இடத்தில்தான் யாருமே எதிர்பார்க்காத சங்கதிகளுக்கும் மாற்றங்களுக்கும் வாய்ப்புள்ளது. ஜனநாயக வழிமுறையில் பொருத்தமான – சிறப்பான தலைமைகள் இல்லை என்றால் அந்த இடத்தை தவிர்க்க முடியாமல் ஏதோ ஒரு அதிகார சக்தியே எடுக்கும். ஏற்கனவே இவ்வாறான சூழலில் புரட்சிகர இயக்கங்களாக ஜே.வி.பியும் தமிழ் விடுதலை இயக்கங்களும் ஆயுதப்போராட்டத்தில் எழுச்சியடைந்தன. ஆனால் அவை இராணுவ அதிகாரத்தின் மூலமாக ஒடுக்கப்பட்டன. ஆகவே மீண்டும் இப்போதைக்கு அப்படியான புரட்சிகர ஆயுதப்போராட்ட இயக்கங்கள் எழுச்சியடைவதற்கான சூழல் குறைவு. அந்த இடத்தை இனியொரு சக்தியாக இராணுவமே நிரப்ப முற்படும். இலங்கையில் இது இலகு. மட்டுமல்ல ஆச்சரியமானதும் இல்லை.

எத்தனையோ அரசியல் ஆச்சரியங்களைக் கண்டது இலங்கை அரசியல் வரலாறு. ஜனநாயக ஆட்சி என்று சொல்லிக் கொண்டே ஜனநாயக விரோத ஆட்சியை நடத்தியிருக்கிறது. மனித உரிமைகளைக் காப்போம் என்று பிரகடனப்படுத்திக் கொண்டே மனித உரிமைகளுக்கு எதிராகச் செயற்பட்டிருக்கிறது. பயங்கரவாதச் சட்டத்தை அடிப்படையாக வைத்துக் கொண்டு இராணுவ ஆதிக்கத்தைப் பிரயோகித்திருக்கிறது. உயிரும் குருதியும் சிந்தச் சிந்த ஆட்சி நடத்தப்பட்டிருக்கிறது. வடக்குக் கிழக்கில் கடந்த 40 ஆண்டுகளாக இராணுவ மேலாதிக்கத்தின் கீழான நிர்வாகமே நடந்து கொண்டிருக்கிறது. ஒரு கட்டத்தில் இந்தியா தன்னுடைய படைகளை இலங்கைக்குள் இறக்கியிருக்கிறது. ஆயுதப்போராட்ட எழுச்சிகளும் போராட்டங்களைக் குரூரமாக ஒடுக்கியதும் நடந்திருக்கிறது. எதிரும் புதிருமாக 50 ஆண்டுகாலப் போட்டிப் பாரம்பரியத்தை உடைய கட்சிகளான ஐ.தே.கவும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் ஒன்றாகச் சேர்ந்து ஆட்சியை அமைத்திருக்கின்றன. இதற்கு வரலாற்றுப் பகைமுரணுடைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, எதிர்க்கட்சி வரிசையிலிருந்து கொண்டே ஆதரவளித்திருக்கிறது. இப்பொழுது இரண்டு பிரதமர்கள் அதிகாரத்திலிருக்கிறார்கள் என்ற நிலை வந்திருக்கிறது. இப்படி ஆச்சரியமான அரசியல் நிகழ்வுகள் நடக்கும்போது ஏன் இராணுவ ஆட்சி மட்டும் நிகழாது? தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்டவர்களே ஜனநாயக மறுப்பு, மனித உரிமை மீறல், அதிகார துஷ்பிரயோகம், வன்முறை அரசியல் என்றெல்லாம் செய்ய முற்படும்போது இவற்றையிட்ட துணிச்சல் படைத்தரப்புக்கு ஏன் வராது?

இதற்கு வாய்ப்பாகக கடந்த காலங்களில் படைத்துறைக்கு அரசாங்கம் வழங்கிய முக்கியத்துவம் உள்ளது. அரச எதிர்ப்புப் போராட்டங்களை ஒடுக்குவதற்குப் படைகளைப் பயன்படுத்தியதால் அவற்றை மகிழ்விக்கவும் குளிர்விக்கவும் வேண்டிய தேவை அரசுக்கு ஏற்பட்டது. இதனால் படைகளின் தளபதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் உச்ச அங்கீகாரத்தையும் மதிப்பையும் வளங்களையும் அளித்தது. போதாக்குறைக்கு பல சந்தர்ப்பங்களில் சிவில் நிர்வாகத்திலும் படைகள் பங்கேற்றிருக்கின்றன. வடக்குக் கிழக்கில் இன்னும் இந்த நிலை நீடிப்பதைக் காணலாம். இதன் மூலம் சிவில் அனுபவமும் சிவில் நிர்வாகத்தில் பங்கெடுக்கும் விருப்பமும் படைத்துறைக்கு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே அனுருத்த ரத்வத்த, சரத் பொன்சேகா போன்றவர்கள் அரசியலில் ஈடுபட்டு உயரிடங்களில் இருந்திருக்கிறார்கள். இராணுவத்தளபதியாக இருந்த சரத் பொன்சேகா ஜனாதிபதி வேட்பாளராகக் கூடப் போட்டியிட்டிருக்கிறார். பிறகு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராகவும் இருந்தார். இன்னொரு படை அதிகாரியாக இருந்த கோத்த அபய ராஜபக்ஸ அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார் என்ற நிலை ஏற்பட்டிருப்பதையும் இங்கே கவனத்திற் கொள்ளலாம். ஆனால், இதெல்லாம் எப்படியோ ஜனநாயக வழிமுறையில் தேர்தல் மூலமாகவே நடந்தவை. நடக்கக் கூடியவை. இதில் எப்படி இராணுவ ஆட்சிக்கான இடம்? என்று யாரும் கேட்கக் கூடும்.

(தொடரும்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here