கிளிநொச்சி நகரில் மர்ம மையம்? –       கருணாகரன்

0
153

கிளிநொச்சி நகரில் ஒரு முக்கியமான மையம். இதற்கு முன்பாக பொலிஸ்  நிலையம் உள்ளது. ஆனால், இந்த மையத்திற்குள் என்ன நடக்கிறது என்று பொலிசுக்குத் தெரியாது.kl.ground அருகிலே, இந்த மையத்தின் ஒரே வேலியோடு அக்கம் பக்கமாக இருக்கிறது இராணுவ முகாம். அவர்களுக்கும் இதற்குள்ளே என்ன நடக்கிறது என்று தெரியாது. இந்த மையத்திலிருந்து சரியாக முன்னூறு மீற்றர் தொலைவில் உள்ளது மாவட்டச் செயலகம் (அரசாங்க அதிபர் பணிமனை). அவர்களுக்கும் இதற்குள் என்ன நடக்கிறது என்று தெரியாது. இப்படியே கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், இந்நாள் பாராளுமன்ற உறுப்பினர், மாகாணசபையினர், பிரதேச சபை உறுப்பினர்கள், உள்ளுர் மட்டப்பிரமுகர்கள், மதத்தலைவர்கள், சனங்கள், பொது அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என எவருக்குமே தெரியாது இந்த மையத்தில் என்ன நடக்கிறது என்று. ஏன் இந்த நாட்டின் ஜனாதிபதி, பிரதமர், முப்படைகளின் தளபதிகள் யாருக்குமே தெரியாது இதைப்பற்றி. எந்தச் சோதிடரிடமாவது கேட்டுப்பாருங்கள். அவர்களுக்காவது ஏதாவது தெரியுமா என்று.

யாரும் உள்ளே நுழைய முடியாதவாறு மூடிக் கட்டப்பட்டிருக்கிறது வளாகம். காவலுக்கு அல்லது பாதுகாப்புக்குச் சில காவலாளிகள். இரவு பகலாக ஆள் மாறி ஆள் காவலிருக்கிறார்கள். “என்னப்பா உள்ளே நடக்கிறது? என்று கேட்டால், “ஒன்றுமே நடக்கவில்லையே!” என்று முழிக்கிறார்கள். “அப்படியென்றால், ஏன் காவலிருக்கிறீங்கள்?” என்றால், “நமக்குச் சம்பளம் கொடுக்கிறார்கள். வேலையையும் போட்டுக் கொடுத்திருக்கிறார்கள். காவலிருக்கிறோம். இதற்கு மேல் நமக்கு ஒன்றுமே தெரியாது” என்று பதில் வருகிறது.

உண்மைதான். இந்தக் காவலாளிகளுக்கு எதுவுமே தெரியாது. அவர்களை ஒரு பாதுகாப்பு உத்தியோகத்தர்களைக் கொமிசனுக்கு வழங்கும் நிறுவனம் ஒன்று பணிக்கு நிறுத்தியுள்ளது. அவர்கள் தங்கள் கடமையைச் செய்கிறார்கள். அவ்வளவுதான். எனவே இதைப்பற்றி காவலாளிகளுக்குப் பொறுப்பான நிறுவனத்திடம் விசாரித்துப் பார்த்தேன்.

“காவலாளிகளை நாங்கள் நியமித்திருக்கிறோம். அவர்களுக்கான சம்பளத்தைத் தவறாமல் தருகிறார்கள். மற்றும்படி அங்கே என்ன நடக்கிறது? என்ன நடக்கவில்லை என்பதை எல்லாம் அறிவது எங்களுடைய வேலை இல்லை. ஆகவே எங்களுக்கு எதைப்பற்றியும் தெரியாது” என்று கையை விரித்தார்கள்.

அப்படியென்றால், இந்த இடத்தில், அதுதான் இதற்குள்ளே என்னதான் நடக்கிறது?

முன்னொரு காலம் கிளிநொச்சி நகரின் இதயமாக இருந்தது இந்த இடம். இதயமே உடலின் இரத்த ஓட்டத்திற்கு ஆதாரம். அழகுணர்ச்சியின் ஊற்றிடம்.

1970, 80 களில் T.M. சௌந்தரராஜன் தன்னுடைய குழுவினரோடு வந்து இங்கே மாபெரும் இசை நிகழ்ச்சியை நடத்தினார். கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து மட்டுமல்ல, வன்னிப் பெரும்பரப்பிலிருந்தே ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டு வந்து அதைக் கண்டு களித்தனர். பிறகு மலேசியா வாசுதேவன், K.J ஜேசுதாஸ், L.R. ஈஸ்வரி எல்லாம் வந்து பாடினார்கள்.

“ட்ரம்ஸ் சிவமணி” எல்லோரையும் காற்றிலே மிதக்க வைக்கிறமாதிரி ஒரு கலக்கு கலக்கினார் இங்கே.

அந்த நாட்களில் இலங்கையெங்கும் கொண்டாட்டத்தை நிகழ்த்திய  “கோமாளிகள்” நாடகம் கூட இந்த மையத்தில் பல அரங்குகள் கண்டது.

“பாட்டுக்குப் பாட்டு” இசை நிகழ்ச்சி, ஆணழகன் போட்டி… பளுத்தூக்கும் சாகஸப்போட்டி, கார்ணிவெல் காட்சி எனப் பல நிகழ்வுகள் எல்லாம் இங்கே நடந்தன.

இதைவிட உள்ளுர் கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகள், நாடகங்கள் எனப் பலவும் அரங்கேறின.

மேதினக் கூட்டம் தொடக்கம் அரசியல் கூட்டங்கள், ஒன்று கூடல்கள், கொள்கைப் பிரகடனங்கள் என வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்ச்சிகள் எல்லாம் இங்கே நடந்தன.

1965 இல் திருச்செல்வம் அமைச்சராக இருந்தபோது, தமிழரசுக் கட்சிப் பொதுக்கூட்டம் ஒன்றில், “தமிழர்கள் எல்லோரும் ஒன்றுபட்டிருக்க வேண்டும்” என்பதற்குப் பதிலாக, ”தமிழர்கள் எல்லோரும் ஒன்றுக்கு இருக்க வேண்டும்” என ‘சுத்த தமிழ்’ பேசியதும் இங்கேதான்.

1969இல் சண்முகதாசன் தலைமையிலான சீனக் கொம்யுனிஸ்ற் கட்சியsoosaiின் மாபெரும் பொதுக்கூட்டமும், கலை நிகழ்ச்சிகளும் நடந்ததும் இங்கேயே. அந்த நிகழ்வுக்கு கிளிநொச்சியின் வரலாறு காணாத மக்கள் கூட்டம் திரண்டு வந்திருந்தது. இதை அவதானித்த கொழும்பு பத்திரிகை ஒன்று 1970இல் நடைபெற்ற பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் இந்தக் கட்சியின் அப்போதைய பொதுச் செயலாளராக இருந்த நா.சண்முகதாசன் கிளிநொச்சித் தொகுதியில் தேர்தலில் போட்டியிடக்கூடும் என ஆரூடம் கூறியிருந்தது. ஆனால் சண்முகதாசன் தேர்தலில் போட்டியிடவில்லை என்பது வேறு கதை.

இதைவிட ஆயிரக்கணக்கான விளையாட்டு வீரர்கள், தலைமுறை தலைமுறையாக விளையாடிக்களித்தார்கள் இங்கே. மாட்டு வண்டிச் சவாரி தொடக்கம் ஏராளம் போட்டிகள் நடந்தன.

புலிகளின் காலத்தில் பொங்குதமிழ் எழுச்சி தொடக்கம் புலிகளின் ஆயுதக்காட்சி, மாதிரிப் பயிற்சித்திடல், போராளிகளின் ஒன்று கூடல் எனப் பல நிகழ்வுகள் இங்கே நடந்தேறின.

பேச்சுவார்த்தைக் காலங்களில் உலகத் தலைவர்களையும் பிரமுகர்களையும் உலங்குவானூர்திகள் அழைத்து வந்து தரையிறங்கின. பிரபாகரன் – கருணா முரண்பாடு வந்தபோது புலிகளின் திருகோணமலை மாவட்டத்தளபதியாக இருந்த பதுமன் இறுதியாக வந்து இறங்கியதும் இதே அரங்கில்தான்.

மட்டுமல்ல, வடக்குக் கிழக்கில் உள்ள எட்டு மாவட்டங்களையும் இணைத்து மாபெரும் விளையாட்டு நிகழ்வைப் புலிகள் நடத்தினார்கள் இங்கே. தேசிய விளையாட்டு விழாவாகக் களை கட்டிய நிகழ்ச்சி அது. பல நூற்றுக்கணக்கான வீரர்கள். லட்சக்கணக்கான சனங்கள் ஒன்று திரண்டு ஒரு வாரத்திற்கும் மேலாக இந்த விளையாட்டு விழா நடந்தது. பல நூற்றுக்கணக்கான விளையாட்டு வீரர்கள் இதில் இனங்காணப்பட்டனர். ஒவ்வொரு மாவட்டத்தின் விளையாட்டுக் குழுவுக்கும் அந்தந்த மாவட்டத்தின் விளையாட்டுத் தலைவர்களோடு புலிகளின் தளபதிகளும் பங்கேற்றிருந்தனர்.

பிறகொருபோது நாட்டில் அமைதியும் சமாதானமும் நடந்தேற வேண்டும் என்று மனோ கணேசன் தலைமையில் மாபெரும் கூட்டமொன்றும் நடந்தது.

இப்படிக் காலந்தோறும் பொதுப்பயன்பாட்டிற்குள்ளாகி வரலாற்றுச் சிறப்புகளைப் பெற்றது இந்த மையம்.

அதுதான் கிளிநொச்சி ரொட்றிக்கோ மைதானம் அல்லது கிளிநொச்சி முற்றவெளியாகும்.

காலமெல்லாம் களிப்பூட்டி, வரலாற்றின் சிறப்பு நிகழ்வுகளோடு பிணைந்திருந்த இந்த மாபெரும் அரங்கு, மக்களின் மனங்களில் நிறைந்திருந்த சிறப்பிடம், இன்று சிறைப்பட்டுக் கிடக்கிறது. உள்ளே என்ன நடக்கிறது என்று யாருக்குமே தெரியாத மர்மக் களமாகியுள்ளது.

எப்போதும் எல்லோருக்கும் தன்னைத் திறந்து வைத்திருந்த விளையாட்டரங்கில் இன்று யாருமே நுழைய முடியாது. அங்கே என்ன நடக்கிறது என்று அறிய முடியாது. எதிர்காலத்தில் அதில் நுழைய வாய்க்குமா என்றும் தெரியாது.

2012 ஆம் ஆண்டு  அப்போதய விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த தலைமையில் மகிந்த ராஜபக்ஸ கிளிநொச்சி நகரில் சர்வதேச விளையாட்டு மைதானத்துக்கான அடிக்கல்லை நாட்டினார். இலங்கையில் உள்ள ஒன்பது மாகாணங்களுக்கும் ஒன்பது மைதானம் என்ற திட்டத்தில் இந்தச் சர்வதேச மைதானம் அமைக்கப்படும் என்று கூறப்பட்டது. ஒன்பது மைதானங்களுக்கும் ஒரே அkl stadiumளவு நிதி ஒதுக்கீடு. ஒரே விதமான வடிவமைப்பு என்பது பொதுக்கொள்கையாக இருந்தது.

இதன்படி 750 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. முதற்கட்டப்பணிகள் மிகத் துரித கதியில் நடந்தன. இதற்குக் காரணம், 2014 அல்லது 2015 இல் இந்த மைதானத்தில் தேசிய, சர்வதேசப் போட்டிகளை நடத்த வேண்டும் என்று கூறப்பட்டது.

ஆனால், எவ்வளவுக்கு விரைவாகப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டனவோ அதே அளவுக்கு திடீரென நிர்மாணப்பணிகள் மந்தமடைந்தன. ஒரு கட்டத்தில் மைதானத்தில் என்ன நடக்கிறது என்றே தெரியாத அளவுக்கு நிலைமை மாறியது.

அதோடு ஆட்சியும் மாறியது. அமைச்சர் மகிந்தானந்த அளுத்கம ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளாகினார் என்று விசாரணைகள் நடந்தன. (ஆனால், நிச்சயமாக இந்த மைதான விசயத்தில் மகிந்தானந்த அளுத்கமவை விட அவருக்கு மேலே இருந்தவர்களின் கைகள்தான் விளையாடிருக்கும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்). நிர்மாணப்பணிகளில் ஈடுபட்ட ஒப்பந்தகாரர்கள் செலவீனம் அதிகமாகி விட்டது என மீள் ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பித்திருக்கிறார்கள் என்று தகவல்கள் வெளியாகின.  இந்த இழுபறியில் மைதானத்தில் ஒன்றுமே நடக்கவில்லை.

2016 இல் கிளிநொச்சிக்கு விஜயம் செய்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் இந்த மைதானத்தைக் குறித்துக் கேட்டபோது, “நிச்சயமாக பணிகள் விரைவில் நிறைவடையும். இது தொடர்பாக உரிய கவனம் எடுக்கப்படும்” என்று கூறிச்சென்றார்.

“அடுத்த ஆண்டுக்கான தேசிய ரீதியான விளையாட்டுப்போட்டி கிளிநொச்சியில்தான் நடக்கும். அதில் தானும் கலந்து கொள்வேன்” என்றும் வாக்குறுதியளித்தார் பிரதமர்.

இது நடந்து மூன்று ஆண்டுகள் நிறைவடைகின்றன. மைதானப்பணிகள் பாதியளவு கூட நிறைவடையவில்லை. ஏன் பிறகு எதுவும் நடக்கவே இல்லை.

இப்பொழுது அங்கே என்ன நடக்கிறது என்று யாருக்கும் தெரியாது.

மைதானம் எதிர்காலத்தில் இயங்குமா என்று கூடத்தெரியாது.
இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வும் கிளிநொச்சி விளையாட்டரங்க நிர்மாணமும் ஒரே மாதிரி இருக்கின்றன என்று சொல்கிறார் ஒரு நண்பர்.kl meet

இந்த விளையாட்டரங்கைச் சும்மா விட்டிருந்தாலே மாலை நேரங்களில் நகரில் உள்ளவர்கள் விளையாடுவார்கள். மாவட்ட மட்ட, மாகாண மட்டத்திலான போட்டிகள் பல நடந்திருக்கும்.

குறைந்த பட்சம் மாடுகளாவது மேய்ந்திருக்கும் என்பது பலருடைய அபிப்பிராயம்.

இதற்கொரு முடிவைக் காண்பதற்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருக்கும் லாயக்கில்லை. இந்நாள் பாராளுமன்ற உறுப்பினருக்கும் தெம்பில்லை. மாகாணசபையினர், முதலமைச்சர், மாவட்டச்செயலர், மீள்குடியேற்ற அமைச்சர், தமிழர்களுக்காகப் பதவி துறந்தேன் என்று கூறும் முன்னாள் ராஜாங்க அமைச்சர், ஜனாதிபதிக்குச் சிரிப்புக் காட்டிக்கொண்டு பக்கத்திலே நிற்கும் பாராளுமன்ற உறுப்பினர் இப்படி எத்தனையோ பேர் உள்ளனர்.

எவருக்கும் இந்த மர்ம முடிச்சை அவிழ்க்கத் தெரியவில்லை.

யாராவது சொல்லுங்கள். எப்போது திறக்கப்படும் இந்த மர்மக் களம்?

உண்மையில் இதுவொரு மக்களின் உரிமை மீறலாகும். கிளிநொச்சியில் பொதுமக்கள் ஒன்று கூடுவதற்கான – பொது நிகழ்வொன்றை நடத்துவதற்கான, மாவட்ட மட்டத்திலான விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான இடம் ஒன்றில்லை. அதற்கென இருந்த ஒரே இடம் இந்த முற்றவெளிதான். இதை மூடி வைத்திருப்பதன் மூலம் அல்லது முடக்கி வைத்திருப்பதன் மூலம் இந்த மக்களின் செயற்பாட்டுரிமைகள் – ஒன்று கூடுவதற்கான சூழல் மறுக்கப்பட்டுள்ளது. இதைப்பற்றிய கவலைகள் நமது “அரசியல் பெருந்தகை”களுக்கே இல்லாமற் போய்விட்டது.

மாவீரர் துயிலுமில்லத்தைப் பற்றியும் முள்ளிவாய்க்கால் நினைவிடத்தைப் பற்றியும் பேசுவதற்கு நிகரானது இந்த மாதிரி முடக்கப்பட்ட மையங்களைப் பற்றிப் பேசுவதுமாகும். மக்கள் மனமகிழ்வோடு கூடி வாழட்டும் என்றே போராளிகளும் மக்களும் போராட்டத்திலும் போர்க்களத்திலும் மடிந்தனர். அப்படியென்றால், அவர்களுடைய கனவை நாம் எந்த வகையில் மதிக்கிறோம்? என்பது இங்கே எழுகின்ற கேள்வி.

விளையாட்டரங்கின் நிர்மாணிக்கப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டு ஆறு ஆண்டுகள் கடந்து விட்டன. இப்பொழுது முடக்கப்பட்டிருக்கும் விளையாட்டரங்கின் நிலையைப்பற்றி அறிவதற்கு வழிகளே இல்லை.

ஆனால், இதற்கான நிதியின் ஒரு பகுதி அனுராதபுரம் மாவட்டத்தில் அமைக்கப்பட்ட மைதானத்துக்குத் திருப்பட்டு, அங்கே பணிகள் முடிவுறுத்தப்பட்டதாகத் தெரியவருகிறது.

அப்படியென்றால், அடுத்தது என்ன?

எல்லோரும் அனுராதபுரத்திற்குப் போய்தான் கூட்டங்கள் நடத்த வேண்டும். அங்கேதான் விளையாட வேண்டுமா?

இதை மீட்பதற்கான மீட்பர்கள் யார்? அவர்கள் எப்பொழுது களமிறங்குவர்?

இந்த மர்ம முடிச்சு எப்போது, யாரால் அவிழும்?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here