முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள ஒட்டறுத்தகுளம் கிராமத்தில் இன்று இயந்திரம் மூலம் நெல் நாற்று நடுகை செய்யப்பட்டு இயற்கை முறையில் பராமரிக்கப்பட்ட வயல் நிலத்தில் அறுவடை விழா முல்லைத்தீவு பிரதி மாகாண விவசாய பணியகத்தின் (விரிவாக்கம்) ஏற்பாட்டில் காலை 09.30 மணிக்கு நா.மகேந்திரன் என்பவருடைய வயலில் முல்லைத்தீவு மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் பூ.உகநாதன் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வுக்கு மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர், மாந்தை கிழக்கு பிரதேச சபை செயலாளர், பிரதி விவசாய உதவிப் பணிப்பாளர், விவசாய போதனாசிரியர்கள், நீர்ப்பாசன திணைக்கள தொழில்நுட்ப உத்தியோகஸ்தர், கிராம சேகவர், சமூர்த்தி உத்தியோகத்தர், மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கமக்கார அமைப்புக்களின் உறுப்பினர்கள், பெண்கள் கமக்கார அமைப்பின் உறுப்பினர்கள், இளைஞர் விவசாய கழக உறுப்பினர்கள், கிராம அபிவித்தி சங்க உறுப்பினர்கள், மாதர் சங்க உறுப்பினர்கள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.

மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பித்த இந்நிகழ்வு மாந்தை கிழக்கு பிரதேச செயலாளரினால் அறுவடை ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன் பின் உரையாற்றிய பிரதி மாகாண பணிப்பாளர் பூ.உகநாதன் இது போன்ற நாற்று நடுகை முறையை எதிர்காலத்தில் மாந்தை கிழக்கு பிரதேச விவசாயிகள் ஆர்வத்துடன் செயல்படுத்துவதற்கு இலகுவாக நாற்றுநடும் இயந்திரங்கள் தங்குதடையின்றி வழங்குவதற்கு தமது திணைக்களம் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் இவ் நடுகை முறை மூலம் செலவு குறைவும், வழமையான விளைச்சலை விட மேலதிகமாக 30-50 புசல்வரை அறுவடை செய்யமுடியும் என்றும் அவர் தெரிவித்தார். அத்துடன் தற்போது நாட்டில் நிலவும் படைப்புழு தாக்கத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பாகவும் அவர் விவசாயிகளுக்குத் தெளிவுப்படுத்தினார்.

அத்துடன் விவசாயிகளுடைய குறைநிறைகளை கேட்டறிந்ததுடன் அவர்களுக்கான உதவித்திட்டங்களையும், ஆலோசனைகளையும் வழங்குவதாகவும் அவர் உறுதியளித்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here