இலத்தீன் அமெரிக்க நாடுகளில் சிறுவர்களுக்கு பாதுகாப்பான நாடு கியூபா !

0
109

சிறுவர்களுக்கான சிறப்பான வாழ்க்கையை உருவாக்குவதில் இலத்தீன் அமெரிக்காவில் கியூபா முதன்மையானதாக இருப்பதாக, “சேவ் தி சில்ட்ரன்” அமைப்பின் புதிய உலகளாவிய அறிக்கை கூறுகிறது.

“சேவ் தி சில்ட்ரன்” அமைப்பு தொடங்கப்பட்டு நூற்றாண்டுகள் ஆனதையொட்டி ”குழந்தைகளுக்கான சிறந்த வாழ்க்கையை உருவாக்குதல் (Building a better life with children)” என்ற தலைப்பிலான இந்த அறிக்கை வெளியிடப்பட்டது. கடந்த இரண்டு பத்தாண்டுகளை ஒப்பிடும்போது தற்போது 28 கோடி குழந்தைகள் உடல் நலத்துடனும் வளர்வதுடன் கல்வி பெறும் வாய்ப்பையும் பெற்றுள்ளதாக அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.

குழந்தை இறப்பு, கல்வி வாய்ப்பு, ஊட்டச்சத்து மற்றும் குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும் நடவடிக்கைகளான குழந்தைத் தொழிலாளர், குழந்தைத் திருமணம், படுகொலைகள் மற்றும் கட்டாய இடம்பெயர்வு போன்றவற்றிற்கு எதிரான சர்வதேச குறியீடுகளை பயன்படுத்தி 176 நாடுகளை இந்த அறிக்கை மதிப்பீடு செய்கிறது.

குழந்தைகளை பேணுவதற்கான உலகளாவிய தரவரிசையில் இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபிய தீவுகளிலிருந்து கியூபா முதலிடம் பிடித்துள்ளது. சிலி மற்றும் பார்படாஸ் ஆகிய நாடுகள் அடுத்து வருகின்றன.

அதே நேரத்தில் இப்பகுதிகளில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக படுமோசமாக செயல்பட்ட நாடாக குவாத்தமாலா உள்ளது. அதே போல தரவரிசையில் கடைசி 30 நாடுகளில் இப்பகுதிகளிலிருந்து இடம் பிடித்த ஒரே நாடும் இதுதான். தர வரிசையில் ஹோண்டுராஸ் 40-வது இடம் பிடித்துள்ளது. வெனிசுலா, ஹைதி மற்றும் எல் சால்வடோர் ஆகிய நாடுகள் பட்டியலில் கடைசி இடம் பிடித்துள்ளன.

கடந்த 20 ஆண்டுகளில் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினருக்கு சார்பாக இன்றியமையாத முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், அவர்களுக்கு எதிரான முதன்மையான உரிமை மீறலாக வன்முறை இன்னமும் இருக்கிறது என்று “சேவ் தி சில்ட்ரன்” அமைப்பின் இயக்குனர் ஆலோசகர் நான்சி ராமிரெஸ் கூறினார்.

இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியனில் குழந்தைகள் இறப்பதற்கான முதன்மையான காரணங்களில் ஒன்றாக இந்த அவலம் தொடர்கிறது. ஒவ்வொரு நாளும் 70 சிறார்களது மரணங்கள் அங்கு ஏற்படுகின்றன என்று அவர் எச்சரிக்கிறார்.

 

“2000-ம் ஆண்டிலிருந்து, இப்பகுதியில் சிறுவர்கள் படுகொலை விகிதம் 8 விழுக்காடு அதிகரித்துள்ளது” என்று ராமிரெஸ் கூறினார்.  அமெரிக்க வல்லரசின் பல்வேறு தலையிடல்களையும் தாக்குதல்களையும் எதிர்த்து இன்றும் கியூபா தலை நிமிர்ந்து நிற்கிறது என்றால் அதற்கு ஒரே காரணம் அதன் தொடர்ச்சியான ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வுதான். இதர பெரும்பாலான இலத்தீன் அமெரிக்க நாடுகள் அமெரிக்காவிடம் அடிபணிந்து விட்டன. மக்கள் நலத்திட்டங்களையும் துறந்து விட்டன. விளைவை அறிக்கை விளக்குகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here