கிழக்கில் தேர்தல் கால கொக்கரிப்புகள்

0
92

ஐரோப்பிய நாடு ஒன்றின் கொழும்பிலுள்ள தூதரகத்தில் பணியாற்றும் நீண்ட கால நண்பர் ஒருவர் (தமிழர்) “கோட்டாபயவுக்கு கிழக்கில் அதிகப்படியான வாக்குகள் கிடைக்குமாம், அப்படித்தானே  நிலைமை?” என்று சொன்னார். இதற்கு என்ன பதிலைச் சொல்லிவிட முடியும்.
தேர்தல் ஒன்று வந்தாலே, அது கோடிக்கணக்கில் பணம் புரளும் காலமாக மாறிவிடும். முஸ்லிம்களின் வாக்குகளைச் சிதறடிப்பதற்காக ஒரு தரப்பும் தமிழர்களின் வாக்குகளைச் சிதறடிக்க மற்றொரு குழுவும் சிங்களவர்களின் வாக்குகளைச் சிதறடிப்பதற்கு இன்னுமொரு பெருங்குழுவும் களத்தில் நிற்கின்றன.

இதில்தான், பெரும்பான்மையினக் கட்சிகள் இரண்டினதும் வேட்பாளர்களில் ஒருவர், பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெறவேண்டும். இங்கு சிறுபான்மை மக்களின் வாக்குகள் வெற்றியைத் தீர்மானிப்பதை விடவும், சிங்கள மக்களே தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

மிக நீண்ட வாக்குச்சீட்டு வரலாற்றுப் பதிவைச் செய்துவிட்ட இந்த 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல், பிரதான கட்சிகள் தங்களது சின்னத்தை, கட்சியைத் தவிர்த்த, வேட்பாளர்களுக்கு ஆதரவுகளை வழங்குகின்ற, புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடுகின்ற, இரண்டாம் விருப்பு வாக்குகள் எண்ணப்படப்போகும் தேர்தல் எனப் பல்வேறு பதிவுகளை, இலங்கையில் இட்டுவிடப்போகிறது.

சிறுபான்மை மக்கள் தீர்மானித்து விட்டார்கள் என்ற கோசத்தோடு, அனேக முஸ்லிம் தரப்பினர், சஜித் பிரேமதாஸ ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவார் என்ற உறுதியோடு பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மலையகத்திலும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரிக்கும் ஒன்றாய் முன்னோக்கி செல்லும் தேர்தல் பிரசார கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அது தவிர, கோட்டாபய, அநுர குமார ஆகியோருக்கும் ஆதரவுப் பிரசாரங்கள் நடைபெறுகின்றன.

ஆனால், வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்களின் ஏகோபித்த அரசியல் தலைமைத்துவமாக இருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் உறுதியான முடிவைச் சொல்லவில்லை. அதற்குள், நடைபெற்று வருகின்ற உதிரிக் கட்சிகளின் கொக்கரிப்புகள், எதைச் செய்துவிடப் போகின்றன என்பது, இப்போது முக்கியமானதொரு கேள்வியாக இருக்கிறது.

நாடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற ஜனாதிபதித் தேர்தலில், யார் வெற்றி பெறுவார் என்ற சந்தேகத்துடனேயே செயற்பாடுகள் நாடளாவிய ரீதியில், எல்லாப் பிரதேசங்களிலும் சூடு பிடித்திருக்கின்றது.

இலங்கை வரலாற்றிலேயே, வாக்குப் பிரிப்பு முக்கிய இடத்திலிருக்கும் தேர்தலாக இந்தத் தேர்தலைப் பார்க்க முடியும். இலங்கையில் மாத்திரமல்ல, உலகத்திலும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்து கொண்டிருக்கும் நிலையில், இவ்வருடம் அதிகமான வேட்பாளர்கள் களத்தில் நிற்கின்றார்கள்.

இலங்கையின் வாக்காளர் பரம்பலைப் பார்க்கின்ற போது, தமிழ், முஸ்லிம் மக்கள் விகிதாசாரத்தில் குறைவானவர்களாக இருந்தாலும், அவர்களை நம்பியே ஜனாதிபதித் தேர்தல் வெற்றி இருக்கும் என்பதில், மாற்றுக் கருத்துகள் குறைவாகத்தான் இருக்கும்.

இந்த இடத்தில், நவம்பர் 16 நடைபெறவுள்ள தேர்தலில், ‘கிழக்கில் அதிகமான வாக்குகளை ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய பெற்றுக் கொள்வர்’ என்ற எடுகோளை மய்யமாக வைத்து இக்கட்டுரையை நோக்குவோம்.

கடந்த வாரத்தில், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, கோட்டாபயவுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக அறிவித்தது.

அதேபோன்று, விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்த முன்னாள் கிழக்குத் தளபதியும் தேசியப் பட்டியலில் நாடாளுமன்ற உறுப்பினராகி, அமைச்சரவை அந்தஸ்தில்லா அமைச்சராக இருந்த கருணா, தனது கட்சியின், கோட்டாவுக்கான ஆதரவை வெளியிட்டார்.

அதேபோன்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தேர்தலில் வெற்றி பெற்று, 2018 ஒக்டோபர் குழப்பத்தில் பிரதி அமைச்சராகி, ஒரு வாரத்திலேயே அதனை இழந்த, நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனும் கோட்டாவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

முன்னாள் வடகிழக்கு மாகாணத்தின் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் கூட, தமிழர் சமூக ஜனநாயக் கட்சி சார்பில் கோட்டாவுக்கான ஆதரவை வெளியிட்டிருந்தார்.

இவற்றையெல்லாம் தாண்டி, கடந்த ஞாயிற்றுக்கிழமை (20) மட்டக்களப்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, முற்போக்குத் தமிழர், மக்கள் முன்னேற்றக் கட்சி, அகில இலங்கை தமிழர் மகா சபை, தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி, தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) , ஈழப் புரட்சி அமைப்பு (ஈரோஸ்), கிழக்கு மீள் எழுச்சிக் கழகம், சிறி டெலோ உள்ளிட்ட 10 கட்சிகள் இணைந்து, கிழக்கின் ஒன்றிணைந்த தமிழ்க் கட்சிகளாகத் தம்முடைய ஆதரவைப் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவுக்குத்தான் என்று மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

கிழக்கின் ஒன்றிணைந்த தமிழ்க் கட்சிகள் குறித்து நடைபெற்ற ஊடகச் சந்திப்பில், கருத்து வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன், “கிழக்கில் நினைத்ததை நடைமுறைப்படுத்தக் கூடிய, செயற்படுத்தக் கூடிய நிலையில் முஸ்லிம்களுடைய அரசியல் தலைவர்கள் இருக்கிறார்கள். எந்த ஆட்சி வந்தாலும் அவர்கள் இணைந்து சந்தர்ப்பவாத அரசியலை, அவர்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, பல விடயங்களைச் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்போது ஜனாதிபதித் தேர்தலில் கூட, அனைத்து அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஐக்கிய தேசியக் கட்சி நிறுத்தி இருக்கின்ற சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்குவதாகத் தீர்மானித்திருக்கின்ற சூழலில், நாங்கள் எங்களுடய மக்களது நலன் சார்ந்து, பல விடயங்களை ஆராய்ந்து, தெளிவடைந்த பின்பு, மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான பொதுஜன பெரமுன நிறுத்தியிருக்கின்ற கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு ஆதரவு வழங்குவதாகத் தீர்மானித்திருக்கிறோம்.

இந்த ஆதரவு என்பது, எங்களுடைய தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வுக்காக அயராது உழைத்தல், உடனடித் தீர்வுகளுக்காகப் பேசப்படுகின்ற காணி விடுவிப்பு, காணாமல்போனோர் பிரச்சினை போன்ற விடயங்கள், எங்கள் கிழக்கு மண்ணினுடைய மீள்கட்டுமான அபிவிருத்தி சார்ந்த விடயங்கள் ஆகிய மூன்று விடயங்களை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கிறது” என்று தெரிவித்திருந்தார்.

அவர்களுடைய அறிவிப்பிலேயே சந்தர்ப்பவாதத் தனத்தை வெளிப்படுத்திவிட்ட நிலையில், தமிழர்களின் காலங்காலமான கௌரவத்தை விலைபேசும் தன்மை தெளிவுபடுத்தப்பட்டு இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

இருந்தாலும், இந்த உறுதிப்படுத்தல் என்பது வெறுமனே சாக்குப் போக்குகளைச் சொல்லி, மழுப்பிவிடக் கூடியதொன்றல்ல; என்றாலும், இக்கட்சிகள் குறித்து சற்று ஆராய்ந்துதான் ஆகவேண்டும்.

இந்திய – இலங்கை ஒப்பந்தத்தால் உருவான மாகாண சபை ஆட்சிமுறையால், வடகிழக்கு மாகாண சபையை ஏற்று நிர்வகித்துக் கொண்டிருந்த வேளை, அதைக் கலைத்துவிட்டு, நாட்டை விட்டு இந்தியாவுக்குச் சென்ற ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் வரதராஜப் பெருமாள், தற்போது தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியை வைத்துக் கொண்டு, கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு ஏன் ஆதரவு வழங்குகிறார் என்ற கேள்வியை முதலில் கேட்டாக வேண்டும்.

இவர் இந்தியாவிலிருந்து நாட்டுக்குத் திரும்பியவுடன், அரசியலில் ஈடுபடுவதில்லை என்ற தொனிப்பட கருத்துகள் வெளியிட்டார். ஆனால், கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் இக்கட்சியின் கீழ் அரசியலை நடத்துவதற்காக வெளிப்பட்டார். இப்போது, இந்த ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கையிலும் ஈடுபடுகின்றது.

அடுத்து, இணைந்திருந்த வடக்கு கிழக்கு மாகாணங்களை, மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) முயற்சியால் பிரித்தவுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடாத நிலையில், கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆதரவில் ஆட்சியமைத்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி,  மட்டக்களப்பில், கடந்த காலத்தில் காணாமல் போதல்களுக்குக் காரணமானவர்கள் என்ற பலமான குற்றச்சாட்டை கொண்டவர்கள். முக்கியமாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைதாகி, நான்கு வருடங்களுக்கும் மேலாகக் கட்சித் தலைவர் சிறையில் இருக்கிறார்.

நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் (அமல்), தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில், புளொட் அமைப்பின் சார்பில் 2015ஆம் ஆண்டு போட்டியிட்டு, மட்டக்களப்பில் வெற்றிபெற்றவர். வெற்றி பெற்றது முதலே, தனது கட்சியைத் தாண்டிய பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்ததாகவும் தகவல்கள் இருக்கின்றன. இந்த நிலையில், 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால், புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷ நியமிக்கப்பட்ட அமைச்சரவையில் கிழக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சர் பதியைப் பெற்றிருந்தார்.

அவ்வேளையில், மஹிந்த தரப்புக்கும் தனக்கும் சம்பந்தமில்லை; ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே தனக்கு அமைச்சுப் பதவியைத் தந்ததாகத் தெரிவித்திருந்தார். ஆனால், இப்போது ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு ஆதரவளிப்பதாக அறிவிக்கிறார். இவர், தனிக்கட்சியாக, முற்போக்குத் தமிழர் அமைப்பைத் தற்போது வெளிப்படுத்தி வருகிறார்.

மக்கள் முன்னேற்றக் கட்சி, கிழக்கு மீள் எழுச்சிக் கழகம் என்பவை மட்டக்களப்பில் புதிய கட்சிகள்; அகில இலங்கைத் தமிழர் மகா சபை முழுக்க முழுக்கத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரானதும், கடந்த பல தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவிக் கொண்ட கட்சியாக இருக்கிறது.

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி, கருணாவின் தலைமையில் இயங்கி வருகின்றது. இதில் ஏற்கெனவே தேர்தல்களில் வேறு சின்னங்களில் போட்டியிட்டுத் தோல்விகளைத் தழுவிக் கொண்டவர்கள் பலர் இருக்கிறார்கள்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி), ஈழப் புரட்சி அமைப்பு (ஈரோஸ்), சிறி டெலோ போன்றவற்றைப் பற்றி பெரிதாக ஒன்றும் சொல்லிக் கொள்ளத் தேவையில்லை.

இவ்வாறுதான், கிழக்கின் ஒன்றிணைந்த தமிழ்க் கட்சிகள் என்ற அடையாளத்துக்கு வரலாறுகள் இருக்கின்றன. இதில் என்ன முகிழ்ப்பென்றால், இவர்கள் அனைவருமே, தமிழ்த் தேசிய ரீதியாக, வடக்குக் கிழக்கில், தமிழ் மக்களால் துரோகச் செயற்பாடுகளுக்கானவர்களாகவே பார்க்கப்படுகின்றனர் என்பதுதான்.

இனப்பிரச்சினை சார்ந்து, இலங்கையில் தமிழர்களுக்கான பிரச்சினையானது, சுதந்திரம் பெற்றது முதலே ஆரம்பித்துவிட்ட ஒன்றாகத்தான் இருக்கிறது.

ஆயுதப் போராட்டத்தை, இன முரண்பாட்டுக்கான போராட்டமாக சிலர் அடையாளமிட முனைவது தவறானதொரு கருத்தாகும். ஆனாலும், உண்மையில் பார்க்கப்போனால், நமது நாட்டில் தொடர்ந்தும் பிரச்சினையொன்று இருந்து கொண்டே இருக்கவேண்டும் என்ற சிந்தனையில், ஒரு தரப்பு இருந்து கொண்டேதான் இருக்கிறது.

மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள் என்று ஒரு தரப்பும் தீர்வு பெற்றுத் தருகிறோம் என்று மற்றொரு தரப்பும் நாள்களைக் கடத்திக் கொண்டுதான் இருக்கிறது. இதில் தமிழ்த் தேசியத் தரப்புகளும் அடக்கம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசியம் என்ற கோசங்களுடன் தமிழர்களின் அரசியலுக்குள் பிரவேசித்தார்கள். அவ்வேளையில் பெற்ற வாக்குகளைக் கவனத்தில் வைத்துக் கொண்டு, தற்போதைய நிலையிலும் வெறுமனே அபிவிருத்தி, வேலைவாய்ப்பு என்கிற விடயங்களை அடிப்படையில் வைத்துக்கொண்டு, இலட்சக்கணக்கில் மக்கள் வாக்களிப்பார்கள் என்று நம்பிக்கை கொள்வது புத்திசாலித்தனமானதாக இருக்குமா என்பதுதான் சந்தேகமானது.

ஆனால், காற்றடிக்கின்ற பக்கங்களிலெல்லாம் நாம் ஆடிக்கொண்டும் ஓடிக்கொண்டும் இருக்கின்ற செயற்பாடு, தவறாகவே பார்க்கப்படும்.

அரசியல்வாதிகள் என்பவர்கள் கொக்கரித்துக் கொண்டுதான் இருக்கவேண்டும் என்பதில்லை. அமைதியாகவும் செயற்படலாம் என்பதற்குப் பல வகையானவர்கள் உதாரணங்களாக இருக்கிறார்கள்.

கிழக்கில் இப்போது உருவாகிக் கொண்டிருக்கின்ற ஒன்றிணைந்த தமிழ்க் கட்சிகள் என்ற தரப்பு, கொக்கரிக்கிறதா இல்லையா என்பதை மக்கள்தான் முடிவு செய்வார்கள்.

என்றாலும், இந்த விடயத்தில் முக்கியப்படுகின்ற விடயம் என்னவென்றால், கிழக்கு மாகாணம் என்று சொல்லிக் கொண்டு, மட்டக்களப்பில்தான் இவையெல்லாம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

மொத்தத்தில், மக்கள் அடி முட்டாள்கள் என்ற நிலைப்பாட்டில்தான், இந்த அரசியல்வாதிகள் இருக்கிறார்கள் என்ற முடிவுக்குத்தான் நாம் வரவேண்டியிருக்கிறது.

இது அரசியல்வாதிகளின் பிழையா, மக்களின் தவறா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மக்கள் ஏமாறுகிறார்கள் என்றால், ஏமாற்றுபவர்கள் யார் என்பது அடுத்த கேள்வியாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here