நாய்க்கு எங்கே அடி விழுந்தாலும், காலை நொண்டிக் கொண்டு ஓடும். அதுபோலத் தான், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும்

0
156

தமிழ்த் தேசிய அரசியலின் சாபக்கேடு  –  கே. சஞ்சயன் 

நாய்க்கு எங்கே அடி விழுந்தாலும், காலை நொண்டிக் கொண்டு ஓடும். அதுபோலத் தான், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும், தான் சறுக்குகின்ற இடங்களில் எல்லாம், இந்தியா மீது பழிபோடுவதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறது.2018 உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் ஈ.பி.ஆர்.எல்.எவ்வுக்கும் இடையில் கூட்டணி அமையவிருந்த நிலையில், கடைசி நேரத்தில் தட்டிப் போனது.ஆனந்தசங்கரியின் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் ஈ.பி.ஆர்.எல்.எவ் இணைந்து போட்டியிட்டது. அப்போது, இந்தியாவின் சொற்படியே சுரேஸ் பிரேமசந்திரன் அந்த முடிவை எடுத்தார் என்று குற்றம்சாட்டினார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து ஈ.பி.ஆர்.எல்.எவ் வெளியேறியதில் இருந்து, அதனுடன் இணைந்து செயற்பட்டு விட்டு, உள்ளூராட்சித் தேர்தல் கூட்டு அமையாத கோபத்தை, இன்று வரை அதன் மீது காட்டி வருகிறது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி.

அதற்குப் பிறகு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சி.வி. விக்னேஸ்வரன் முரண்படத் தொடங்கியதில் இருந்து, அவருடன் நெருங்கியிருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, அவருக்குத் தமது கட்சியில் உயர் பதவியைக் கொடுக்கவும் தயாராக இருந்தது. சி.வி. விக்னேஸ்வரன் திடீரென தமிழ் மக்கள் கூட்டணியை ஆரம்பித்ததும், அவரிடம் இருந்து விலகத் தொடங்கியது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் கூட்டு வைப்பதை, இந்தியா விரும்பவில்லை என்று விக்னேஸ்வரன் தம்மிடம் கூறினார் என, கஜேந்திரகுமார் அடிக்கடி கூறி வருகிறார்.

அதேவேளை, கடந்த மாதம் யாழ்ப்பாணத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில், “நாம் தான் இந்தியாவின் நிரந்தரமான நண்பர்கள்” என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் கஜேந்திரன் குறிப்பிட்டிருந்தார்.

ஒரு பக்கத்தில் இந்தியாவை நிரந்தர நண்பன் என்று கூறிக் கொள்ளும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, இன்னொரு பக்கத்தில், இந்தியாவே தம்மை ஓரம்கட்டுவதாகவும் ஒதுக்கி வைப்பதாகவும் பிரசாரங்களை முன்னெடுத்து வந்திருக்கிறது.

இப்போதும் அவ்வாறு தான், ஐந்து தமிழ்க் கட்சிகள் இணைந்து கையெழுத்திட்டுள்ள 13 அம்சங்களை உள்ளடக்கிய பொது இணக்கப்பாட்டு ஆவணத்தின் பின்னால், இந்தியாவே இருந்தது என்று கூறியிருக்கிறார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.அதற்கு அவர் சில விளங்கங்களையும் கொடுத்திருக்கிறார்.

முன்னதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், சி.வி. விக்னேஸ்வரனும் கைவிட்டிருந்த பல விடயங்களை இப்போது, திடீரென ஐந்து கட்சிகளின் கூட்டு, ஏற்றுக் கொண்டிருப்பதை ஓர் அசாதாரண சூழலாக அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

சீனச் சார்பாளரான கோட்டாபய ராஜபக்சவைப் பணிய வைப்பதற்காகவே, அவருக்கு எச்சரிக்கை விடுப்பதற்காகவே, இந்தியா இந்த உடன்பாட்டைச் செய்து கொள்ள வைத்திருக்கிறது என்பது, கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் குற்றச்சாட்டு.

இலங்கையில் நடக்கும் ஜனாதிபதி தேர்தலில் சர்வதேச தலையீடுகள் இருப்பதாகப் பரவலான ஒரு கருத்து இருக்கிறது. வேட்பாளர்களைத் தீர்மானிப்பதில் வெளிநாட்டுத் தூதரகங்கள் தலையீடு செய்திருக்கின்றன என்று, ஜே.வி.பி வேட்பாளர் அநுர குமார திஸநாயக்கவே கூறியிருக்கிறார்.

பூகோள அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு பார்க்கும் போது, இவ்வாறான கருத்துகளில் நியாயங்கள் இருந்தாலும் கூட, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறிவருகின்ற கதையில், எந்தளவுக்கு உண்மை உள்ளது என்ற கேள்வி இருக்கிறது.

“இந்தியா, மேற்கு நாடுகளின் நலன்களை மீறிச் செயற்பட்டால், தமிழ் மக்களிடமிருந்து தமிழ்த் தேசிய அரசியலை இல்லாமல் செய்வதற்குச் செயற்பட்ட நாங்கள், மீண்டும் தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் கோரிக்கைகளை வலியுறுத்துவது மட்டுமல்லாது, அதை ஆதரிக்கவும் தயாராக இருக்கிறோம் என்பதை, இந்தியா தனது முகவர்களான ஐந்து கட்சிகளின் மூலம் கோட்டாபய ராஜபக்சவுக்கு வெளிப்படுத்தியிருக்கிறது” என்று அவர் கூறியிருக்கிறார்.

பொது இணக்கப்பாட்டு ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ள ஐந்து கட்சிகளையும் இந்தியாவின் முகவர்களாகவே அவர் குற்றம்சாட்டியிருக்கிறார்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எப்போதுமே தமக்கு எதிரானவர்களை இந்திய முகவர்கள் என்று சாடுவதை வழக்கமாகக் கொண்டவர் என்பதால் அவரது இந்தக் கருத்து ஆச்சரியப்படக் கூடிய ஒன்று அல்ல.

தாங்களும் இந்தியாவுடன் இணைந்து செயற்படத் தயாராகவே இருப்பதாகவும், எனினும், இந்தியாவின் நலனுக்காக தமிழரின் நலன்களை விட்டுக் கொடுக்கமுடியாது என்றும் அவர் முன்னர் கூறியிருந்தார்.

தாமும் இந்தியாவுடன் இணைந்து செயற்படத் தயார் என்று கூறிக் கொண்டே, ஏனைய கட்சிகளை அவர் இந்திய முகவர் என்பது அபத்தமானது.

அதைவிட, பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில், ஐந்து தமிழ்க் கட்சிகள் இணைந்து பொது இணக்க ஆவணத்தில் கையெழுத்திட்ட கலந்துரையாடலில் கஜேந்திரகுமாரும் அவரது கட்சியினரும் பங்கேற்றிருந்தனர்.

அவர்களும் அந்தப் பொது இணக்க ஆவணத்தில் கையெழுத்திடுவதற்கும் தயாராகவே இருந்தனர். ஒரே ஒரு விடயத்தில் மாத்திரம் முரண்பாடு இருந்தது.

புதிய அரசமைப்புக்காகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால வரைவை நிராகரிப்பதாக, அந்த ஆவணத்தில் குறிப்பிட வேண்டும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கோரியது. அதனை ஏனைய கட்சிகள் எதிர்த்தன. “எமது தரப்புப் கருத்தாக, அதனை ஒரு பின் இணைப்பாகவேனும் சேர்த்துக் கொள்ளுமாறு கெஞ்சினோம். ஆனால் அவர்கள் அதற்கு இணங்கவில்லை. திட்டமிட்டு வெளியேற்றி விட்டார்கள்” என்று அந்தக் கலந்துரையாடலில் இருந்து வெளியே வந்த பின்னர், கஜேந்திரகுமார் பேட்டி கொடுத்திருந்தார்.

அவ்வாறு சேர்த்துக் கொள்ளப்பட்டிருந்தால், கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், அந்தப் பொது இணக்கப்பாட்டு ஆவணத்தில் ஒப்பமிட்டிருப்பார். அதனை ஊகமாகக் கூறவில்லை. அவரே ஊடகங்களிடம் கூறியிருக்கிறார்.

அவ்வாறு பொது இணக்கப்பாட்டு ஆவணத்தின் ஏனைய எல்லா விடயங்களுடனும் ஒத்துப்போன, அதில் கையெழுத்திடவும் தயாராக இருந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அந்த முயற்சியில் இருந்து விலகிக் கொண்ட பின்னர், அதில் கையெடுழுத்திட்ட கட்சிகளை இந்திய முகவர்கள் என்றும், இந்தியா தயாரித்துக் கொடுத்து ஆவணமே அது என்றும் விமர்சிப்பது மிக மோசமான அரசியல்.

“இது இந்தியாவின் பின்புலத்துடன் நடக்கின்ற வேலை, இதில் நாங்கள் இணைந்து கொள்ளத் தயாரில்லை” என்று கூறி விட்டு, அவர் முன்னரே கலந்துரையாடலில் பங்கேற்காமல் ஒதுங்கியிருந்தால் அது அரசியல் நேர்மை.

அவ்வாறன்றி, பொது இணக்கப்பாட்டு ஆவணத்தின் இறுதிக்கட்டம் வரை பயணித்து விட்டு, வெளியே வந்து இந்தியப் பின்னணியுடன் தான் இது நடக்கிறது என்று தமிழ் மக்களைக் குழப்புகின்ற முயற்சிகளில் அவர் இறங்கியிருக்கிறார்.

கடந்தமுறை ஜனாதிபதி தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிபந்தனையற்ற ஆதரவை மைத்திரிபால சிறிசேனவுக்கு அளிக்க முன்வந்தது. அதனைக் கடுமையான விமர்சித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, வல்லரசுகளின் நிகழ்ச்சி நிரலுக்கமையவே கூட்டமைப்பு அந்த முடிவை எடுத்தது என்று கூறியிருந்தது.

வல்லரசுகளுக்கு ஆட்சி மாற்றம் தேவைப்பட்ட போது, அதனை வைத்து வல்லரசுகளின் மூலமாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேரம் பேசியிருக்க வேண்டும் என்றும், அவ்வாறு செய்யாமல், தமிழ் மக்களின் வாக்குகளைக் காட்டிக் கொடுத்து விட்டதாகவும் குற்றம்சாட்டியது.

அவ்வாறு குற்றம்சாட்டிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, அனைத்துத் தமிழ்த் தேசியக் கட்சிகளும், தமது இடைக்கால நிலைப்பாடுகளைக் கைவிட்டு தமிழ் மக்களின் அடிப்படைக் கோரிக்கைகளை வலியுறுத்தும் பொது இணக்கப்பாட்டுக்கு வந்த போது, ‘பிடிச்சிராவித்தனத்தை’க் கைவிட்டு அதனைப் பலப்படுத்தியிருக்க வேண்டும்.

அதை செய்து, தமிழ் மக்களின் பேரம் பேசும் பலத்தை வலுப்படுத்தி, கடந்த முறை கூட்டமைப்பு செய்த தவறை, இந்த முறை செய்ய விடாமல் தடுத்திருக்க வேண்டும்.

அவ்வாறு செய்யாமல், தமிழ் மக்களின் வாக்குகளைச் சிதைக்கும் முயற்சிகளுக்கு இன்னொரு கதவையும் திறந்து வைத்து விட்டு, இந்தியாவின் முகவர்கள் என்றும், இந்தியாவின் திட்டம் என்றும் விமர்சனங்களைக் கொட்டுவது பொருத்தமானதல்ல.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஏனைய தமிழ்க் கட்சிகளை வீழ்த்தி விட்டு, தாங்களே தூய தமிழ்த் தேசியவாதக் கட்சி என்ற அடையாளத்தைப் பெற முனைகிறது.

அதற்காக, ஏனைய கட்சிகளை இந்திய முகவர்களாகவும் வல்லரசுகளிடம் சோரம் போனவர்களாகவும் தமிழ்மக்களிடம் அடையாளப்படுத்த முனைகிறது.

பொது இணக்கப்பாட்டுக்கான கலந்துரையாடலையும் அந்த ஆவணத்தையும் கூட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்களின் பலத்தை உறுதிப்படுத்துவதற்கான ஒரு வழியாகப் பயன்படுத்த எத்தனிக்கவில்லை.

அதனை வைத்து ஏனைய தமிழ்க் கட்சிகளை பலவீனப்படுத்தவும் கேவலப்படுத்தவுமே, முற்பட்டுள்ளது.

இதைத் தமிழ்த் தேசிய அரசியலின் சாபக்கேடு என்று கூறுவதை விட வேறெப்படி கூற முடியும்?

tamilmirror

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here